Dec 29, 2011

Tipu Sultan( The Tiger of Mysore)

Sultan Fateh Ali Tipu
மைசூர் விஜயநகர சாம்ராஜ்ஜிய வீழ்ச்சிக்கு பிறகு ஆட்சி செய்த ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தானை “மைசூர் புலி” என்று அறியப்படுவது, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு சொல்லப்படுகிற வழக்கமான புகழ்ச்சி வார்த்தையல்ல. மாறாக, மெய்யாக கனகச்சிதமாக இவருக்கு பொருத்தும் மதிப்பீடு \ புகழாரம். மரபுவழி வந்த மாண்பும், வீரமும் திப்புவின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டுள்ளன. நாட்டுப்பற்றில் திப்புவுக்கு இணையான ஒருவரை, நடுநிலையான வரலாற்றாசிரியர்களால் குறிப்பிட்டு சொல்லமுடியாது. சுதந்திர காற்றுவீசும் தன்மான இந்தியாவிற்கு அவர்தான் தந்தை, சுதந்திர வேட்கைக்கு வித்திட்டவர் திப்புவே என்று சொன்னால் – அது மிகையாகாது.
திப்பு சுல்தானிற்கு அஞ்சியது போல் ஆங்கிலேயர்கள் வேறெவருக்கும் அஞ்சியதில்லை, அவரிடம் தோற்றது போல் வெள்ளைகார கூட்டம் வேறெவரிடமும் தோற்றதில்லை. 1799 ஆம் ஆண்டு திப்புவை கொன்று கொக்கரித்தது கூட ‘ஐந்தாம் படை’ உதவியுடன் கொல்லைப்புற வழியாக தான்.
49 வயதில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வீரப்போரில் மாண்ட திப்பு, தனது 12 வயதிலேயே அரசவையில் பங்கெடுத்ததோடு, தந்தை ஹைதர் அலிக்கு ஆலோசனைகளும் வழங்கத்தொடங்கி இருக்கிறார். தந்தையின் மறைவிற்கு பிறகு, தனது 32 ஆம் வயதில் மைசூர் சாம்ராஜ்யத்தில் மாமன்னராக பொறுப்பேற்ற மாவீரன் திப்பு, அன்றைய காலத்தில் ‘மலபார்’ என்றறியப்பட்ட கேரளத்தையும் 9 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளார்.
‘ஒரு ஆட்சியாளன் என்பவன் மக்களுக்கு தொண்டு செய்ய வந்தவனேயன்றி அதிகாரம் செலுத்தவந்தவன் அல்ல’ என்பதை சொல்லாலும், செயலாலும் காட்டியவர். இஸ்லாமிய கொள்கையில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டிருந்த அவர், தன்
ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கத்தோடு நடந்துக்கொண்டார்.
இந்தியா நவீன அறிவியலில் வளர்ச்சிக்கு வித்திட்டவர் திப்புவே என்பதை வரலாறு சான்றளிக்கிறது. நவீன உலகின் போர் என்றாலே நினைவுக்கு வரும் “ஏவுகணை’களை உருவாக்கி, ஆங்கிலேய படைகளுக்கு எதிராக ஏவி, சூழ்ச்சிமிகுந்த ஆங்கிலேயர்களை வியப்படைய செய்தார். இதுபோல் அவர் வித்திட்ட பலதுறைகள் உலகளவில் விண்முட்ட வளர்ந்து தழைத்து நிற்பதை காண முடியும்.
பெண்ணுரிமைக்கு இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பெரியவை. பெண்களை மிக இழிவாக கருதி நடத்திய காலத்தில், அவர்களும் தன்மானத்தோடு வாழ வழிவகை செய்தார். 18 நூற்றாண்டின் இறுதியில் அன்றைய மலபார் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட சமூக பெண்களை அடக்கிவைத்து, பாலியல் வன்கொடுமைக்கும், சாதிய கொடுமைகளுக்கும் உள்ளடக்கிய நம்பூதிரிமார்களுக்கு (உயர்சாதி பிராமணர்கள்) எதிராக திப்பு செய்த பிரகடனம், அவர் பெண்ணுரிமைக்கு ஆற்றிய தொண்டிற்கு ஓர் உண்ணத உதாரணம்.
நாட்டின் நலனுக்காக, நாடு தழுவிய அளவில் ஒரு ‘ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணி’ ஒன்றை உருவாக்க முயன்று, திருவிதாங்கூர் சமஸ்தானம், ஐதராபாத் நிஜாம், மைசூர் பழைய பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான், மராத்தியர்கள் ஆகியோரிடம் மன்னனென்றும் பாராமல் மன்றாடி கெஞ்சி இருக்கிறார். அனைவரும் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சவே, தனியாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டிருக்கிறார். உலகளவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்ட, பிரஞ்ச் மாவீரன் நெப்போலியனுடன் தொடர்பு கொள்ளுமளவிற்கு நெஞ்சுரம் கொண்டார். அக்காலத்தில் உலகையே உலுக்கிய மாவீரன் நெப்போலியனே திப்புவுக்கு கடிதங்கள் பல தீட்டியுள்ளான்.
சமீபத்திய என் மைசூர் பிரயாணத்தின் போது, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள மாவீரன் திப்புவின் கோட்டைக்கு செல்லமுயன்ற போது, கோட்டையில் மராமத்து பணிகள் நடைபெறுவதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டேன். அங்குள்ளவர்களை விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளாக இதேநிலை நீடிப்பதாக சொன்னபோது அதிர்ச்சி அடைந்தேன். காரணம், மைசூர் மாநகரிலேயே உள்ள உடையார் ராஜ கோட்டையில் பெரியளவிலான மராமத்து பணிகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதும், பார்வையிட அனுமதிக்கப்பட்டேன்.
இந்த தேசத்தின் விடுதலைக்கு, இந்த தேசத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு, பெண்ணுரிமைக்கு, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு அயராது உழைத்த ஒப்பற்ற ஓர் அரசன், சுதந்திர இந்தியாவின் தந்தை பற்றிய வரலாற்று பதிவுகளையும், சுவடுகளையும் ‘ஐந்தாம் படை’ கூட்டத்தினர் திட்டமிட்டு அழித்தொழிகிறார்களோ? என்ற சந்தேகம் கொள்ளவைக்கிறது. மைசூர் உடையார் ராஜகோட்டையின் புத்தக/பொருட்காட்சி நிலையத்தில் Dr. R. Gopal எழுதிய “Tipu Sulthan – The Tiger of Mysore’ புத்தகத்தை படித்தபோது, நானும், என்னை போன்ற இளைய சமுதாயமும், மாவீரன் திப்புவை பற்றிய உண்மை வரலாற்றினை தெரிந்து கொள்வதிலிருந்து திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன் .
நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகத்தின் அடிப்படையிலும், மேலும் நான் கிடைக்கபெற்றுள்ள இன்னபிற புத்தகத்தின் அடிப்படையிலும் எம்மொழியில், எளிய நடையில் திரிப்பற்ற வரலாற்று தொடரை எழுதி மாவீரன் திப்புவின் வரலாற்றை பகிர்ந்துகொள்ள விளைகிறேன்…
தொடர்வோம்…!!!

Written By M.I.NASEER

1 comment: